சென்னையிலிருந்து சொந்த ஊர் போக திட்டமா.. இ பாஸ் கூட கிடைச்சிடுச்சா?
அந்த எண்ணத்தையே மறந்துவிடுங்கள்
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதற்காகவும், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரப்போகிறது என்ற வதந்தியை நம்பிக் கொண்டும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நினைப்போர், ஒரு முறைக்கு பலமுறை யோசித்து கொள்வது நல்லது என்கிறது கள நிலவரம். ஏனெனில் இதுவரை நீங்கள் பார்த்த உங்கள் மாவட்டம்.. உங்கள் ஊர், என்பது இன்று வேறு ஒரு முகத்தை உங்களுக்கு காட்ட காத்திருக்கிறது.
இதுவரை நீங்கள் ஊருக்குச் செல்லும்போது, தென்காசி மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறது என்றும், விருதுநகர் மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறது என்றும் பெயர் பலகைகளை பார்த்திருப்பீர்கள்.
இப்போதும், அந்த பெயர் பலகைகள் என்னவோ அங்கேதான் இருக்கின்றன. ஆனால், இனிமேலும் அது உங்களை அன்போடு வரவேற்கப் போவது கிடையாது. ராஜ கம்பீரம்
நீங்கள் இ பாஸ் பெற்று உங்கள் சொந்த ஊருக்கு கிளம்பும்போது, ஒரு ராஜா தனது தேர் மீது அமர்வதை போன்ற கம்பீரம் உங்களை ஒட்டிக்கொள்ளும். பாஸ் இருக்கிறதே.. எல்லோரும் சல்யூட் அடித்து அனுப்பி வைப்பார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இந்த கம்பீரத்தை உருவாக்கும். அது உண்மைதான் என்று உங்கள், உள்ளுணர்வை குஷிப்படுத்தும் வகையில், போகும் வழியில் எங்குமே உங்களை தடுத்து நிறுத்தி பெரிதாக கேள்வி கேட்கப் போவது கிடையாது. ஆனால் எது நீங்கள் சேரவேண்டிய மாவட்டமோ அல்லது சொந்த மாவட்டமோ, அதன் எல்லையில்தான் உங்களுக்கான டாஸ்க் ஆரம்பமாகும். முதல் தடை
மாவட்ட எல்லையில் அமைக்கப்படும் சோதனை சாவடியில், தடுத்து நிறுத்தப்படும் நீங்கள், முதலில் தெர்மல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதன் பிறகு அங்குள்ள தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள். சென்னை, மும்பை போன்ற இடங்களில் வருவோருக்கு இந்த கெடுபிடி அதிகம். அவர்களது நடவடிக்கையிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதிகம் பாதிப்பு இல்லாத மாவட்டங்களிலும், கொரோனா பாதிப்பை பரவ விட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இதற்கு காரணம். வசதிகள் கிடையாது
ஆனால், தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள்தான், எதற்காக நாம் ஊருக்கு வந்தோம் என்று உங்களை நினைத்து பார்க்க தோன்ற வைத்துவிடும். கொரோனா பரவலை தடுப்பதற்காக முகாம்கள் ஏற்படுத்தியுள்ளோம் என்பதுதான் அதிகாரிகள் கூறும் காரணம். ஆனால் அந்த முகாம்களின் வாயிலாகத்தான் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சம் உங்களுக்கு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். ஒரே கழிவறை
மொத்த முகாமுக்கும் ஒரே கழிவறை என்ற நிலையில், எப்படி கொரோனா, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாமல் இருக்க முடியும்? உங்களை கொரோனா பரிசோதனை செய்துவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று கூறி முகாமுக்கு அழைத்துச் சென்றாலும், அந்த பரிசோதனை பெரும்பாலும், அன்றைக்கே நடப்பது, கிடையாது. அடுத்த நாளோ, சிலநேரங்களில் அதற்கும் அடுத்த நாள்தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுவரை 80 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தாலும், பெண்கள், குழந்தைகள் உங்களுடன் வந்து இருந்தாலும் அந்த முகாமில்தான் தங்கியாக வேண்டும். வீட்டில் தங்க அனுமதி கிடையாது
முகாம்களில் தங்கியிருப்பவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா இருக்கிறதோ அது தெரியாது. அதன்மூலம் உங்களுக்கு நோய் பரவாமல் இருந்தால் கண்டிப்பாக அது உங்கள் குலதெய்வத்தின் அருளாகத்தான் இருக்க முடியுமே தவிர, அதிகாரிகளின் ஏற்பாடாக இருக்காது. எட்டிப் பார்க்கும் தூரத்தில் வீடு இருந்தாலும் சரி அங்கே உங்களை தங்க அனுமதிக்க வைக்கப்போவதில்லை. நான் செல்போன் ஆப் பதிவு செய்கிறேன், வீட்டுக்குள்ளேயே 14 நாட்கள் இருப்பேன் இப்படி நீங்கள் என்னதான், காரணம் சொன்னாலும், அதை அதிகாரிகள் நம்பப் போவது கிடையாது. வீட்டு தனிமையில் இருக்க வேண்டிய பலரும் ஊர் சுற்றியதால், இப்போது அதிகாரிகளுக்கும் வேறு ஆப்ஷன் கிடையாது. இதுபோன்ற கிடுக்குப்பிடி செய்தாக வேண்டிய நிலையில்தான் அவர்களும் உள்ளனர். வீடுகளை கண்காணிக்க முடியாது
ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகாரிகளை போட்டு நாங்கள் கண்காணிக்க முடியாது, எனவே இந்த முகாமில் நீங்கள் இருந்தாக வேண்டியது கட்டாயம் என்பதுதான் அதிகாரிகள் தரப்பில் இருந்து வரும் பதிலாக இருக்கப்போகிறது. இதற்கு நாம், சென்னையிலேயே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை உங்கள் ஆழ் மனதில் தோன்றி உங்களை நிலைகுலைய வைக்கும். இவ்வளவு செலவு செய்து.. இவ்வளவு அலைச்சலுக்கு பிறகு தங்கும் முகாமில், கூட்டத்தோடு இப்படி ஆபத்தான சூழலில் அகப்பட்டுக் கொண்டோமே என்ற எண்ணம் உங்களை பாதி நோயாளி ஆக்கி விடும். கிராமங்களில் பரவக்கூடாதே
இதற்கு வேறு ஒரு ஆப்ஷன் மட்டும்தான் உள்ளது. அது சொந்த செலவில் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டல் அறைகளை தேர்ந்தெடுத்துக்கொள்வது. ஆனால், அவ்வளவு பணம் செலவிட்டு, யாரோ ஒன்றிரெண்டு பேர்தான் போகத் தயாராக இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு முகாம்தான் கதி. இதில் மாவட்ட நிர்வாகங்களை குறை கூற எதுவுமில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கழிவறை, அல்லது ஒவ்வொருமுறையும் கழிவறையை சுத்தமாக கழுவி கொடுப்பது என்பதெல்லாம், யதார்த்தத்தில் நடக்க முடியாத விஷயம். கொரோனா பரவல் கிராமங்களிலும் நுழைந்துவிடாமல் தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருப்பதால், அவர்கள் கடுமைகாட்டத்தான் செய்வார்கள். கடுமைகாட்டித்தான் ஆக வேண்டியுள்ளது. வீட்டிலேயே இருங்கள்
எனவே இப்போதைக்கு, சென்னைவாசிகளே, நீங்கள் உங்கள் சொந்த மாவட்டத்திற்கோ, ஊருக்கோ இப்போதைக்கு சென்றுவிடாதீர்கள். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு இருந்தபடி, உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் போதும். அங்கே போய் அலைக்கழிக்கப்படுவது ஒரு பிரச்சினை என்றால், இ பாஸ் அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பது இன்னொரு விஷயம். ஏனெனில் இப்போது இ பாஸ் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த மாவட்ட நிர்வாகம்தான் உங்களுக்கு அனுமதி தர வேண்டும். முன்பு நீங்கள் வசிக்கும் மாவட்ட நிர்வாகம் இந்த அனுமதியை கொடுத்து வந்தது. எனவே, எந்த மாவட்டமாக இருந்தாலும், சரி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து இ பாஸ் கேட்போருக்கு, அவ்வளவு எளிதில் பாஸ் கொடுப்பது இல்லை. ஆம்.. மறுபடியும் சொல்கிறோம், உங்கள் ஊர் உங்களை அன்போடு வரவேற்காது.
கருத்துகள்
கருத்துரையிடுக